நவம்பரில் மட்டும் 1200 இண்டிகோ விமானங்கள் ரத்து; விசாரணைக்கு உத்தரவு
நவம்பரில் மட்டும் 1200 இண்டிகோ விமானங்கள் ரத்து; விசாரணைக்கு உத்தரவு
UPDATED : டிச 04, 2025 08:14 AM
ADDED : டிச 04, 2025 07:31 AM

புதுடில்லி: நவம்பர் மாதத்தில் 1,200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ நிறுவனத்திடம் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் விளக்கம் கேட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, பல்வேறு காரணங்களுக்காக, நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை ரத்து செய்தது. டில்லி விமான நிலையத்தில் 38 விமானங்களும், மும்பை விமான நிலையத்தில் 33 விமானங்களும், ஆமதாபாத்தில் 14 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதன்மூலம், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 755 விமானங்களும், வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு காரணமாக 92 விமானங்களும், விமானம் மற்றும் விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 258 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்கள் ரத்தானது குறித்து பயணிகளிடம் இண்டிகோ நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விமான சேவைகளை தடையின்றி வழங்குவதில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்து, அடுத்த 48 மணிநேரத்திற்கான அட்டவணையில் மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் விசாரித்து வரும் நிலையில், ஒரே மாதத்தில் 1200க்கும் மேற்பட்ட விமானங்களின் ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

