ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கு செல்ல வேண்டும்: தொழில்துறையினரிடம் பியூஷ் கோயல் வலியுறுத்தல்
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கு செல்ல வேண்டும்: தொழில்துறையினரிடம் பியூஷ் கோயல் வலியுறுத்தல்
UPDATED : செப் 04, 2025 03:31 PM
ADDED : செப் 04, 2025 03:27 PM

புதுடில்லி : '' ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தத்தின் பலன்கள் நுகர்வோர்களை சென்றடைய வேண்டும்'', என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
டில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது.
இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பியூஷ் கோயல் பேசியதாவது: ஜிஎஸ்டியில் நேற்று சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு இது எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தும். மேலும் விவசாயம் முதல் சிறுகுறுதொழில்துறையிலும் தாக்கத்தை உண்டாக்கும். இதனால் நாட்டில் உள்ள ஒவ்வொரு நுகர்வோரும், தொழில்துறையினரும் பயன்பெற வேண்டும்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் திருப்புமுனையை ஏற்படுத்தும் நடவடிக்கை. 2047 ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற பயணத்தில் இது வரும் நாட்களில் முக்கிய பங்காற்றும். இந்த சீர்திருத்தத்தால் ஏற்படும் பலன்களை தொழில்துறையினர் மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.