மனித குலத்தை பாதுகாக்கும் இந்தியா: ராஜ்நாத் சிங் பெருமிதம்
மனித குலத்தை பாதுகாக்கும் இந்தியா: ராஜ்நாத் சிங் பெருமிதம்
ADDED : நவ 21, 2025 07:32 PM

லக்னோ: உலக நாடுகளில் ஏற்படும் பிரச்னைகளின் போது மனித குலத்தை காக்கும் வகையில் இந்தியா செயல்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
உ.பி.யில், லக்னோவில் உலக தலைமை நீதிபதிகளின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
இந்தியாவை ஒரு நாடாக நீங்கள் பார்த்தீர்களானால் அதன் ஸ்திரத்தன்மைக்கு பின்னால் நம்பிக்கையும், அமைதியும் இருப்பதை காண்பீர்கள். நமது கலாசாரம், கொள்கை மற்றும் நடத்தை ஆகிய மூன்றும் இணைந்து அமைதியும், நீதியும் தனித்தனி வார்த்தைகள் அல்ல என்பதை இவ்வுலகுக்குச் சொல்கின்றன.
நீதியின்றி அமைதி முழுமை பெறாது, அமைதியின்றி நீதி நிலைத்திருக்க முடியாது. இந்தியா ஒரு யோசனையை முன் வைத்து, அதை செயல்படுத்தவும் செய்கிறது என்பதை இந்த உலகுக்கு மீண்டும், மீண்டும் நிரூபித்துள்ளது.
உலக நாடுகள் இடையே நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், அதை தீர்ப்பதற்கான முயற்சியை எடுக்கும் முதல் நாடாக இந்தியா உள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிக்கிய மக்களை வெளியேற்றுவதாக இருந்தாலும், நேபாள பூகம்பத்திற்கு பின்னர் நிவாரணம் தருவதாக இருந்தாலும், இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியாக இருந்தாலும் சரி, ஆப்பிரிக்காவில் மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி... மனித குலத்தை காக்க, இந்தியா அனைத்து இடங்களிலும் முன் வருகிறது.
இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

