ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வர் ஸ்டாலின்
ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வர் ஸ்டாலின்
ADDED : செப் 08, 2025 09:45 AM

சென்னை: ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; ஒரு வார காலமாக ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தை மேற்கொண்டேன். மன நிறைவோடு திரும்பியுள்ளேன். இந்தப் பயணத்தை பொறுத்தவரையில் மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே உள்ள 17 நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு போகாமல், நம்ம மாநிலத்திலேயே விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.
ஒரு துடிப்பான அமைச்சராக டிஆர்பி ராஜா இந்தப் பயணத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கிலும் நாம் கடந்து வந்த பாதையையும், அடைய வேண்டிய இலக்குகளையும் விளக்கமாக பேசியுள்ளேன். அயலக தமிழர்கள் மற்றும் லண்டன் பல்கலை உள்ளிட்ட இடங்களில் பேசியது, காரல் மார்க்ஸ் நினைவிடம், அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பெருமையுடன் திரும்பியுள்ளேன்.
எனக்கு அனைத்து விதங்களிலும் மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. சிலரால் இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதுக்கு இந்த வெளிநாட்டு பயணம், இங்கு இருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா? என்று எல்லாம் அறிவுபூர்வமாக கேட்பதாக நினைத்து, புலம்பி இருக்கிறார்கள்.
அவங்களுக்கு எல்லாம் நான் சொல்வது என்ன என்று கேட்டுக் கொண்டால், ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் நிறைய ஜெர்மன் நிறுவனங்கள் வந்திருந்தன. அப்போது, தமிழகத்தைப் பற்றி எடுத்துச் சொன்ன போது, தமிழகத்தில் இவ்வளவு வசதி உள்ளது இப்போது தான் தெரிகிறது என்று கூறினார்கள். இனி தமிழகத்தை நோக்கி நிறைய நிறுவனங்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.
வெளிநாட்டு தலைவர்களுடன் வலுவான உறவை உருவாக்கவும், இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நானே வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ஏற்கனவே தமிழகத்தில் நிறுவனங்கள் இருந்தாலும் , அவங்களின் புதிய திட்டங்களை இங்கே தான் தொடங்க வேண்டும் என்று உறுதியளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மனிதவளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் பற்றி முதல்வராக இருக்கும் நானே அவர்களிடம் எடுத்துக் கூறினேன். 11ம் தேதி ஒசூருக்கு செல்கிறேன். அங்கு ரூ.2,000 கோடி டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, பணியாளர்கள் தங்கும் இடத்தை திறந்து வைக்க உள்ளேன். அதன்பிறகு, ரூ.1,100 கோடி மதிப்பிலான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப் போகிறேன். ஏற்கனவே, தூத்துக்குடியில் நடத்தியதைப் போல ஒசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறோம். அங்கும் பல ஆயிரம் கோடி முதலீடுகள் வர இருக்கிறது, என்றார்.