ஐ.பி.எஸ்., அதிகாரி தற்கொலை: ஹரியானா எஸ்.பி., இடமாற்றம்
ஐ.பி.எஸ்., அதிகாரி தற்கொலை: ஹரியானா எஸ்.பி., இடமாற்றம்
ADDED : அக் 11, 2025 11:31 PM

சண்டிகர்: ஹரியானாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி புரன் குமார் தன் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ரோஹ்டக் மாவட்ட எஸ்.பி., நரேந்திர பிஜார்னியாவை மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது.
ஹரியானாவின் ரோஹ்டக்கில் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கு, ஐ.ஜி., அந்தஸ்திலான பதவியில் இருந்தவர் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி புரன் குமார். இவரது மனைவி அம்னீத் குமார்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
இவர், ஜப்பான் சென்றிருந்த நிலையில், புரன் குமார், சண்டிகரில் உள்ள தன் வீட்டில் கடந்த 7ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதற்கிடையே, தன் கணவர் தற் கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'ரோஹ்டக் எஸ்.பி., பிஜார்னியா மற்றும் ஹரியானா டி.ஜி.பி., சத்ருஜித் கபூர் ஆகியோர் ஜாதி பாகுபாடு காட்டி மனரீதியாக என் கணவரை துன்புறுத்தினர். அதுகுறித்து கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் மீது எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என போலீசில், புரன் குமார் மனைவி அம்னீத் குமார் புகார் அளித்திருந்தார்.
எனினும், புரன் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
தற்போது அவரது உடல், சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புரன் குமார் தற்கொலை தொடர்பாக சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதையடுத்து, ரோஹ்டக் எஸ்.பி., நரேந்திர பிஜார்னியாவை இடமாற்றம் செய்தும், புதிய எஸ்.பி.,யாக சுரேந்தர் சிங் போரியாவை நியமித்தும், மாநில அரசு, தனித்தனியாக இரு உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.