sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெரும் பொருளாதார சரிவில் ஈரான்; 1 டாலர் = 14.2 லட்சம் ரியால்! மீண்டும் வெடித்தது போராட்டம்

/

பெரும் பொருளாதார சரிவில் ஈரான்; 1 டாலர் = 14.2 லட்சம் ரியால்! மீண்டும் வெடித்தது போராட்டம்

பெரும் பொருளாதார சரிவில் ஈரான்; 1 டாலர் = 14.2 லட்சம் ரியால்! மீண்டும் வெடித்தது போராட்டம்

பெரும் பொருளாதார சரிவில் ஈரான்; 1 டாலர் = 14.2 லட்சம் ரியால்! மீண்டும் வெடித்தது போராட்டம்


ADDED : டிச 31, 2025 12:14 AM

Google News

ADDED : டிச 31, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரானில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவில், 14.2 லட்சம் என்ற அளவுக்கு சரிந்ததால், மூன்று ஆண்டுக்குப் பின், அங்கு மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேற்காசிய நாடான ஈரானில், 1979ல் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டப்படியே அங்கு ஆட்சி நடந்து வருகிறது. இதனால், அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. 'ஹிஜாப்' எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணியவில்லை என்று கூறி, கடந்த 2022ம் ஆண்டு மஹ்சா அமினி, 22, என்ற இளம்பெண்ணை, அந்நாட்டு போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த அமினி, 3 நாட்கள் கோமாவில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டும், ஹிஜாப்புக்கு எதிராகவும் நாடு முழுதும் மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார், பொதுமக்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மூன்று ஆண்டுக்குப் பின், ஈரானில் அதேபோன்ற அளவில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததும், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்ததுமே அதற்கு காரணம்.

ஈரான் மத்திய வங்கியின் கவர்னர் முகமது ரேசா பெர்சின், 2022ல் பதவியேற்றபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 4.3 லட்சமாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியால் மதிப்பு 14.2 லட்சமாக சரிந்தது. இது ஈரான் வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பாகும்.

மேலும், அந்நாட்டின் விலைவாசி உயர்வு, 42.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டைவிட 72 சதவீதமும், மருத்துவப் பொருட்கள் விலை 50 சதவீதமும் அதிகரித்துள்ளன. அதே சமயம் அரசின் 2026 - -27ம் ஆண்டிற்கான புதிய பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பும் வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஈரானின் பொருளாதார மையமாகக் கருதப்படும் டெஹ்ரான் கிராண்ட் பஜார் மற்றும் நகர மையத்தில் உள்ள சாடி தெருவில் உள்ள வணிகர்கள், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானில் 1979ல் நடந்த இஸ்லாமிய புரட்சியில் முக்கிய பங்காற்றிய வணிகர்களும், இதில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் துவங்கிய போராட்டம், பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களாக மாறியுள்ளன.

டெஹ்ரான் மையப் பகுதியில் துவங்கிய போராட்டங்கள், இஸ்பஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், மக்களின் வாழ்வாதாரமே தன் முதல் முன்னுரிமை என்றும், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்க உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடிக்கு மத்தியில், ஈரானின் மத்திய வங்கி கவர்னர் முகமது ரேசா பெர்சின் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக அப்துல் நாசர் ஹெம்மாட்டி புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் முக்கிய மூன்று சந்தை மதிப்பு ஈரானில் மூன்று வகையான பண பரிமாற்ற மதிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. ஒன்று திறந்த சந்தை மதிப்பு, இரண்டாவது அதிகாரப்பூர்வ மதிப்பு, மூன்றாவது ஈரான் ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தும் 'நிமா' எனப்படும் அன்னியச் செலாவணி மேலாண்மை ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த 'நிமா' அமைப்பின் படியே ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



சரிவுக்கு காரணம் என்ன? ஈரானின் அணு ஆயுத உற்பத்திக்கு எதிராக ஐ.நா., பொருளாதார தடை விதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவின் தடைகள், ஈரான்- - இஸ்ரேல் இடையேயான போர், கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைவு ஆகியவை அந்நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளன. மேலும், ஈரான் அரசின் தவறான பொருளாதார கொள்கையே பணவீக்கத்திற்கு காரணம் எனக் கூறி, அந்நாட்டில் வணிகர்களும், மக்களும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.



நம் நாட்டில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 90 ரூபாயாகும். அதாவது ஒரு டாலர் வாங்குவதற்கு, 90 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இதுவே, ஈரானில், ஒரு அமெரிக்க டாலர் வாங்க, 14.2 லட்சம் ரியால் கொடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us