அமெரிக்காவுடன் சண்டையை தொடர விருப்பமில்லை; ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவுடன் சண்டையை தொடர விருப்பமில்லை; ஈரான் அறிவிப்பு
ADDED : செப் 16, 2026 08:53 PM

பீஜிங்: மேற்கு ஆசியாவில் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ''அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து நீட்டிக்க விரும்பவில்லை,'' என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மற்றும் மார்சில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 'மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரான் - அமெரிக்கா பேச்சு நடத்த வேண்டும்' என, சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சீனா சென்றுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பீஜிங்கில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார்.
வாங் யீ, ''ஈரான், அமெரிக்கா இரு நாடுகளும் மோதலை நீட்டிப்பது யாருக்கும் நன்மை தராது. இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, ஏற்கனவே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் பேச்சை தொடங்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த அப்பாஸ் அராக்சி, ''அமெரிக்காவுடனான மோதலை தொடர நாங்கள் விரும்பவில்லை. எங்கள் உரிமைகளை பாதுகாத்தபடி, துாதரக வழியில் தீர்வு காண தயாராக உள்ளோம்,'' என்றார்.
