அய்யப்ப பக்தராக நடிப்பதா? பினராயிக்கு கவர்னர் கேள்வி
அய்யப்ப பக்தராக நடிப்பதா? பினராயிக்கு கவர்னர் கேள்வி
ADDED : செப் 27, 2025 04:46 AM

கோழிக்கோடு : சபரிமலை அய்யப்ப பக்தர்கள் போல் கேரள அரசு நடிப்பதாக கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சமீபகாலமாக இங்கு பாரத மாதா தொடர்பாக கவர்னருக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது. இந்நிலையில், கோழிக்கோடில் நேற்று நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்ற கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பேசியதாவது:
ஆசிரியர்கள் பாதங்களை மாணவர்கள் கழுவி பூஜை செய்யும் குரு பூஜைக்கு பள்ளிகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை சந்தித்து பேசினர். கலாசாரம் உச்சத்தில் உள்ள ஒரு மாநிலத்தில், இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன் என யோசித்தேன். எல்லாம் அரசியலுக்காக தான். பாரத மாதாவையும், குரு பாத பூஜையையும் விமர்சிப்பவர்கள் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் போல் நடிக்கின்றனர்.
இவர்களுக்கு உண்மையில் மனதளவில் துாய்மையும், கொள்கைகளும், பக்தி உணர்வும் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அரசியல் வசதிக்காக மட்டுமே அய்யப்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது. பாரத மாதாவும், குரு பூஜையும் எங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.