கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
ADDED : அக் 31, 2026 03:58 AM

சென்னை: கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தர விடக் கோரிய வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு விபரம்: மத்திய அரசு நடத்தும் விசாரணையில், சவுரவ் தாஸ் நேபாளி என தெரிய வந்தால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட வைகளை ரத்து செய்ய வேண்டும். நீதித்துறை குறித்தும், குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும், அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். எனவே, அவருடைய சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, 'இது தொடர்பாக, மத்திய அரசுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
