காம்பவுண்ட் சுவர் பழுது கண்ணுக்கு தெரியலையா? ரீல்ஸ் போட்ட திமுக எம்எல்ஏ.,வை வெளுக்கும் நெட்டிசன்கள்
காம்பவுண்ட் சுவர் பழுது கண்ணுக்கு தெரியலையா? ரீல்ஸ் போட்ட திமுக எம்எல்ஏ.,வை வெளுக்கும் நெட்டிசன்கள்
ADDED : டிச 17, 2025 01:50 PM

நமது சிறப்பு நிருபர்
சென்னை: திருவள்ளூரில் சுவர் இடிந்து மாணவன் பலியான பள்ளிக்கு, சில தினங்களுக்கு முன் ஆய்வுக்கு போன திமுக எம்எல்ஏ., 'முதல்வர் யார், துணை முதல்வர் யார்' என்றெல்லாம் மாணவர்களிடம் கேள்வி கேட்டு ரீல்ஸ் வெளியிட்டார். இப்படியெல்லாம் செய்யத்தெரிந்த எம்எல்ஏ.,வுக்கு பழுதான காம்பவுண்ட் சுவர் தெரியவில்லையா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருவள்ளூர் அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்த மாணவன், மதிய உணவு சாப்பிடும்போது, சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானான். பராமரிப்பில் அரசு காட்டிய அலட்சியமே உயிர்பலிக்கு காரணம் என, மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பள்ளிக்கு சில நாள் முன் ஆய்வுக்கு திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் சென்று இருந்தார். மாணவர்களிடம், கேள்விகளை கேட்டு அதை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோவில் மாணவர்களிடம், முதல்வர் பெயர் என்ன? துணை முதல்வர் பெயர் என்ன, கல்வி அமைச்சர் யார் என்றெல்லாம் கேட்டு இருந்தார். அவரது கேள்வி, மாணவர்களின் பதில்களை ரீல்ஸ் வீடியோவாக தயார் செய்து இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
இப்போது அந்த வீடியோவை பகிர்ந்து இணையவாசிகள், எம்எல்ஏ.,வை விமர்சிக்கின்றனர்.
''பள்ளிக்கு ஆய்வு சென்ற எம்எல்ஏவுக்கு, காம்பவுண்ட் சுவர் பழுதாகி இருந்தது தெரியவில்லையா? அதை சற்று கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இருக்காது, பள்ளிக் கூடத்திற்குச் சென்று ரீல்ஸ் மட்டும் எடுக்காமல் மாணவர்கள் நலன் கருதி, நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும்'' என கருத்துகளை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

