போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திடீர் திருப்பம்; பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திடீர் திருப்பம்; பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்
ADDED : அக் 11, 2025 03:46 PM

ரமலா; பாலஸ்தீன முக்கிய தலைவர் மர்வான் பர்ஹாட்டியை விடுதலை செய்ய இஸ்ரேல் மறுத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தினரிடையே போர் தொடங்கியது. 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்த இந்த போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் நிலவியது.
பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை பரிந்துரைத்தார். அதை ஏற்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அறிவித்தது.
இந் நிலையில், திடீர் திருப்பமாக, பிணைக்கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் பிரபலமான மற்றும் முக்கிய பாலஸ்தீன தலைவரான மர்வான் பர்ஹாட்டியை விடுதலை செய்ய இஸ்ரேல் மறுத்துள்ளது. மர்வான் பர்ஹாட்டி, பாலஸ்தீனத்தை ஒன்றிணைக்கும் நம்பகமான, வலுவான தலைவராக கருதப்படுகிறார்.
தற்போது அவருக்கு 66 வயது ஆகிறது. பத்தா கட்சி தலைவரான அவர், 2002ம் ஆண்டு முதல் இஸ்ரேலிய சிறையில் இருந்து வருகிறார். இவருக்கு பல ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. மர்வான் பர்ஹாட்டியுடன் மேலும் பல முக்கிய தலைவர்களையும் விடுவிக்க இஸ்ரேல் மறுத்து இருக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டிய சூழலில் இஸ்ரேலின் இந்நடவடிக்கை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, அக்.13ம் தேதிக்குள் 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.