மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேல் இணைக்காது: அரபு நாடுகளுக்கு டிரம்ப் உறுதி
மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேல் இணைக்காது: அரபு நாடுகளுக்கு டிரம்ப் உறுதி
ADDED : செப் 26, 2025 09:34 PM

வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேல் தங்கள் நாட்டுடன் இணைக்காது என்று இஸ்லாமிய நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: காசாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இது போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தமாக இருக்கும். உயிருள்ள 20 பிணைக்கைதிகள் உட்பட 38 இறந்த பிணைக்கைதிகளையும் மீட்டு வர வேண்டும்.
நாங்கள் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். நாங்கள் ஏதோ ஒரு ஒப்பந்தத்தை முடிக்க நெருங்கிவிட்டோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக சூசகமாக கூறியுள்ளார்.
முன்னதாக, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களையும் டிரம்ப் சந்தித்தார். மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்காது என்று அவர்களுக்கு உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.