பா.ஜ.,வை வைத்து எங்களை எடை போடுவது பெரிய தவறு; மோகன் பாகவத்
பா.ஜ.,வை வைத்து எங்களை எடை போடுவது பெரிய தவறு; மோகன் பாகவத்
UPDATED : ஜன 04, 2026 04:13 PM
ADDED : ஜன 04, 2026 05:34 AM

போபால்: “பா.ஜ.,வை வைத்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகப்பெரிய தவறு. அதன் சீருடை மற்றும் பயிற்சிகளை வைத்து துணை ராணுவப்படை என அனுமானிக்க வேண்டாம்,” என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:
நாங்கள் சீருடை அணிகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்துகிறோம் . கம்பு வைத்து பயிற்சிகள் செய்கிறோம். இதை வைத்து ஆர்.எஸ்.எஸ்., ஒரு துணை ராணுவப் படையோ என கருதினால், அது மிகப்பெரிய தவறு.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அது ஒரு தனித்துவமான அமைப்பு. பா.ஜ., வழியாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை புரிந்து கொள்ள முயற்சிப்பதும் தவறானது. கிளை அமைப்பான வித்யா பாரதி வழியாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அணுகுவதும் தவறானது.
சரியான தகவலை தெரிந்துகொள்ள, தற்போதுள்ள மக்கள் அதிக முயற்சிகளை எடுப்பதில்லை. மூலத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் அவர்களிடம் இல்லை. எதற்கெடுத்தாலும், 'விக்கிபீடியா' உதவியை நாடுகின்றனர்.
அதில் இருக்கும் தகவல் அனைத்துமே உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ்., பற்றி அறிய வேண்டுமெனில், அதை பற்றி உண்மையாக அறிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம் சேவகர்களை வளர்க்கிறது. பாரதத்தின் வளர்ச்சிக்கான லட்சியங்கள், சிந்தனைகள் மற்றும் மதிப்புகளை அவர்களுக்கு ஊட்டுகிறது.
ஆனால், துாரத்தில் இருந்தபடி, 'ரிமோட் கன்ட்ரோல்' போல ஒருபோதும் ஸ்வயம் சேவகர்களை ஆர்.எஸ்.எஸ்., இயக்கியது இல்லை.
தேசப்பற்று மிகுந்த சூழலை உருவாக்கும் தேச அபிமானிகளை, தன் கிளை அமைப்புகள் மூலம் ஆர்.எஸ்.எஸ்., வளர்த்தெடுத்து வருகிறது.
ஒரு விஷயத்தை எதிர்க்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ ஆர்.எஸ்.எஸ்., உருவாகி இருக்கலாம் என்ற கருத்து பரவலாக உலவுகிறது. ஆனால், அது உண்மை அல்ல.
ஆர்.எஸ்.எஸ்., பற்றி என் கருத்துகளை கூறிவிட்டேன். புரிந்துகொள்ள வேண்டுமெனில் இயக்கத்திற்குள் வந்து பாருங்கள். இனிப்பு பற்றி இரண்டு மணி நேரம் உபதேசம் செய்தாலும், அதன் சுவையை உணர முடியாது. அதை அள்ளி சாப்பிட வேண்டும். அப்போது தான் சுவை தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

