சென்னையில் பெய்தது மேகவெடிப்பா, இல்லையா? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்
சென்னையில் பெய்தது மேகவெடிப்பா, இல்லையா? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்
ADDED : அக் 18, 2026 02:52 PM

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, தரமணி, துரைப்பாக்கம், பெருங்குடி, வடசென்னையில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதிகளவாக பாரிமுனையில் 361 மிமீ மழை பதிவானது.
எதிர்பாராத தருணத்தில் பெய்து தள்ளிய மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும், திடீர் மழைக்கு மேகவெடிப்புதான் காரணம் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தன. மேகவெடிப்பால், வானம் பொத்துக் கொண்டு மழை பெய்ததாகவும் மக்கள் பேச ஆரம்பித்தனர்.
திடீர் கனமழை மேகவெடிப்பால் நிகழ்ந்தது இல்லை என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்து உள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது;
வட தமிழகத்திலும், அதனை ஒட்டிய தென்கடலோர ஆந்திராவிலும் மேலடுக்கு சுழற்சி நிலவியது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டியது. வெப்பச்சலன மேகங்கள் உருவாகி தீவிரம் அடைய, வளி மண்டலத்தில் நிலவிய சாதகமாக சூழல்களே இதற்கு காரணம்.
20 முதல் 30 சதுர கிமீ பரப்பளவில் 1 மணி நேரத்தில் 100 மிமீ அல்லது அதற்கு அதிகமாக மழை பெய்தால் மட்டுமே அது மேகவெடிப்பாகும். வானிலையில் காணப்பட்ட சூழல், மழையின் தன்மை ஆகியவற்றை கணித்து பார்க்கும் போது மேகவெடிப்பு ஏற்படவில்லை.
இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.
