உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்; இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்
உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்; இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்
ADDED : செப் 04, 2025 10:23 PM

புதுடில்லி: உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
சமீபத்தில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான இருதரப்பு சந்திப்புகளுக்கு முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரதமர் மோடியுடன் உக்ரைனில் போர் மற்றும் அமைதிக்கான வாய்ப்புகள் குறித்து தொலைபேசியில் பேசினார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 4) உக்ரைன் நிதி அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ரஷ்யா நடத்திவரும் போர் குறித்து ஜெய்சங்கர் ஆலோசித்துள்ளார். இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
இன்று மாலை உக்ரைனின் நிதியமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் பேசினேன். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், ரஷ்யா உடனான போர் குறித்தும் விவாதித்தோம்.
இந்த மோதலுக்கு மிக விரைவில் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும் வேண்டிய செயல்பாடுகளை இந்தியா ஆதரிக்கிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.