இந்தியா மீது கூடுதல் வரி; அமெரிக்காவிடம் அதிருப்தியை தெரிவித்த ஜெய்சங்கர்
இந்தியா மீது கூடுதல் வரி; அமெரிக்காவிடம் அதிருப்தியை தெரிவித்த ஜெய்சங்கர்
ADDED : செப் 23, 2026 08:16 PM

நியூயார்க்: ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் அதிப்தியை அவர் பதிவு செய்தார்.
ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டத்தினால் இந்திய நலன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கவலைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தச் சந்திப்பின் போது, ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டம் தொடர்பாக இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகள் குறித்து எடுத்துரைத்தேன். மேலும், வளைகுடா மற்றும் உக்ரைன் நிலவரங்கள் குறித்தும் விவாதம் நடத்தினோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தகத் தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிப்பது தொடர்பான சட்டத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். இந்த சூழலில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.
