UPDATED : ஜன 13, 2026 01:27 PM
ADDED : ஜன 13, 2026 01:24 PM

புதுடில்லி: ஜனநாயகன் படம் தணிக்கைச்சான்று கிடைக்காத விவகாரத்தில், விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜனநாயகன் படம், தணிக்கைச்சான்று கிடைக்காமல் முடங்கியுள்ளது. இந்த படத்துக்கு சான்று கோரி, தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டதும், சென்சார் போர்டு சார்பில் மேல் முறையீடு செய்து தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து படத்தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அங்கும் சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், சென்சார் போர்டை ஆயுதமாக பயன்படுத்துவதாக மத்திய அரசு குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், தணிக்கைச்சான்று கிடைக்காத விவகாரத்தில், மத்திய அரசை குறை கூறும் வகையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட பதிவு: 'ஜன நாயகன்' திரைப்படத்தை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் தடுக்கும் முயற்சி, தமிழ் கலாசாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். பிரதமர் மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
விஜய் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

