ரூ.1.50 கோடி கலசம் திருட்டு; பக்தர் போல வேடமணிந்து வந்த நபர் கைது
ரூ.1.50 கோடி கலசம் திருட்டு; பக்தர் போல வேடமணிந்து வந்த நபர் கைது
ADDED : செப் 08, 2025 02:58 PM

புதுடில்லி: டில்லியில் ஜெயின் சமூக நிகழ்ச்சியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான இரு கலசங்களை திருடிச் சென்ற நபரை உத்தரபிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஜெயின் சமூகத்தினரின் 'தசலட்சண மகாபர்வ்' நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 10 நாள் நடக்கும் இந்தத் திருவிழாவின் போது, வைரம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டிருந்த 115 கிராம் எடையுள்ள தங்க கலசமும், 760 கிராம் எடையுள்ள தங்கத் தேங்காயையும் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.
இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள், போலீஸில் புகார் அளித்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, பூஷன் வர்மா என்பவன் ஜெயின் சமூகத்தினரைப் போல பாரம்பரிய உடை அணிந்து வந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், பூஷன் வர்மாவை உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். மேலும், அவனிடம் இருந்த கலசத்தையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே, இவன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.