கார்த்திகை தீபம் ஹிந்து பண்டிகை அல்ல; கண்டுபிடித்தார் அமைச்சர் ரகுபதி
கார்த்திகை தீபம் ஹிந்து பண்டிகை அல்ல; கண்டுபிடித்தார் அமைச்சர் ரகுபதி
UPDATED : டிச 04, 2025 10:35 PM
ADDED : டிச 04, 2025 08:57 PM

சென்னை: '' கார்த்திகை தீபம் என்பது ஹிந்துக்களின் பண்டிகை அல்ல. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை'' என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் கூறியதாவது : ஹிந்துத்துவ அமைப்புகள், மதவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என முயற்சி செய்கின்றன. அந்த அமைப்புகள் எதை கையில் எடுப்பது என விழித்துக் கொண்டிருக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்னையை உருவாக்குகிறார்கள். கார்த்திகை தீப பண்டிகை ஹிந்துப் பண்டிகை கிடையாது. தமிழர் பண்டிகை. உலக தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை.
தற்போது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரச்னையை கிளப்பி உள்ளனர். நீதிமன்றத்தை அணுகி ஒரு உத்தரவை பெற்றுள்ளனர். 2014ம் ஆண்டு இந்த விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிகள் இரண்டு பேர் கொண்ட அமர்வு, 'வழக்கமாக எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றிக் கொண்டு உள்ளோமோ அதே இடத்தில் ஏற்ற வேண்டும்,' என தீர்ப்பு அளித்து இருந்தது. ஆனால், அதை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ளாதவர்கள், புதிதாக ஏதோ ஒன்றை கண்டுபிடித்ததை போன்று, கார்த்திகை தீபத்தை குறிப்பிட்ட இடத்தில் ஏற்ற அனுமதி கொடுத்தனர். அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்தார்.
நாங்கள் நீதிமன்றத்தையும், நீதியையும் மதிப்பவர்கள். முதல்வர் ஸ்டாலினைப் போல் சட்டத்தை மதிக்கும் முதல்வர் வேறு யாரும் கிடையாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது.
2014ல் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யாமல் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றால், அதனை எப்படி அனுமதிக்க முடியும். அப்படி அனுமதி வழங்கினால், தமிழக அரசு மீது என்ன குற்றச்சாட்டு வரும். 2014ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை பின்பற்றி செயல்படுகிறோம். இந்தத் தீர்ப்பை மறந்துவிட்டு செயல்படுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பை மறந்துள்ளனர். 2014 தீர்ப்பை படிக்காமல், அதனை மறந்துவிட்டு புதுக் கதையை கட்டினால் மக்கள் நம்புவார்களா?
தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர்களுக்கு இபிஎஸ் போன்ற அடிமைகள் கிடைப்பார்களே தவிர வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பவர்கள்.
கடந்த 2014ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வந்த தீர்ப்புதான். இதை எதிர்த்து, அவர் மேல் முறையீடு செய்யவில்லை. அன்று புதிய இடத்தில், தீபம் ஏற்றுவதை எதிர்த்து, அப்போதைய அ.தி.மு.க., அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா ஏற்றுக்கொண்ட தீர்ப்பை, இன்று பழனிசாமி எதிர்க்கிறார். பா.ஜ.,வுக்கு முழு அடிமை என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க, என்ன செய்ய வேண்டுமோ, அதை தமிழக அரசு செய்து வருகிறது. அதை மீறி எந்த சக்தி வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்.
இபிஎஸ்க்கு வேறு வேலை கிடையாது. தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவது தான் ஒரே பணி. இதற்காக அதிமுகவினர் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

