கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
UPDATED : அக் 03, 2025 01:17 PM
ADDED : அக் 03, 2025 01:05 PM

மதுரை: கரூரில் 41 பேரை பலி கொண்டு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்.,27ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கரூர் தவெக மாவட்ட செயலாளர், பொருளாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பொதுக்கூட்டங்களை தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே நடத்தப்படக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கட்சி கூட்டங்களை நடத்த தடையில்லை, என்றனர்.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்பாக அரசு நிலையான வழிகாட்டுதல் பிறப்பிக்கும் வரை, எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், பொதுக்கூட்டம் அல்லது எந்த கூட்டமாயினும், தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே வழங்கப்படாது என்று அரசு தரப்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், சாலைகளில் கூட்டம் நடத்துவதற்கு தடை விதித்தனர். நீதிபதிகள் கூறியதாவது; அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகளின் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம் ஆம்புன்ஸ் வசதியோடு, கழிப்பறை, வெளியே செல்லும் வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவது உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, கரூர் கூட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
மேலும், விசாரணை இன்னும் தொடக்க நிலையில் இருக்கும் போது, எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதோடு, சிபிஐ விசாரணை கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதேவேளையில், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரிய மனு தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் அரசு தரப்பினரை இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்த அதேவேளையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற்றது.
தவெகவினரின் அடாவடியால் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்ஜாமின் மனு தள்ளுபடி
மேலும், நாமக்கல்லில் பிரசாரத்தின் போது தனியார் மருத்துவமனை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது மேலும் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என்றும் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.