கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: போலீஸ் எப்ஐஆரில் பரபரப்பு தகவல்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: போலீஸ் எப்ஐஆரில் பரபரப்பு தகவல்
ADDED : செப் 29, 2025 01:05 PM

கரூர்: கரூரில் வேண்டுமென்றே விஜய் வருகை காலதாமதம் செய்யப்பட்டதாக போலீஸ் எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். முன்னதாக நாமக்கல்லில் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தற்போது கரூர் போலீஸ் ஸ்டேஷன் எப்ஐஆரில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரம் பின்வருமாறு:
* உயிர்ச் சேதம் ஏற்படும் என்று பலமுறை எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் தவெக நிர்வாகிகள் சொன்னதைக் கேட்கவில்லை.
* கூட்டத்தை அதிகப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்குடனே விஜய் வருகை 4 மணி நேரம் தாமதமாக்கப்பட்டுள்ளது.
* பல மணி நேரம் காத்திருந்ததால் தொண்டர்கள் மற்றும் மக்கள் வெயில் மற்றும் தாகத்தால் சோர்வடைந்தனர்.
* பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை.
* போலீசார் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர்
* மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். போதுமான அளவு தண்ணீர், மருத்துவ வசதி இல்லை.
* கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலை சோர்வு அடைந்தனர். கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
* நிபந்தனைகளை மீறியும், கால தாமதம் செய்தும் தவெக நிர்வாகிகள் இடையூறு செய்தனர். கரூரில் அனுமதியில்லாமல் ரோடு ஷோ நடத்தினர்.
* கரூருக்கு மதியம் 12 மணிக்கு விஜய் வருவதாக தவெக அறிவித்ததால் அதிகமான கூட்டம் கூடியது. தொண்டர்கள் போலீசார் சொல் பேச்சு கேட்காமல் மரத்தில் ஏறியதால் மரக்கிளைகள் முறிந்தும், தகர கொட்டகை சரிந்தும் பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாங்கள் சொன்னதை காதில் வாங்காமல் தொடர்ந்து அசாதாரண சூழலில் ஆனந்த் ஈடுபட்டார். கூட்டத்தை அதிகரிக்க விஜய் தாமதமாக வந்தார் என நாமக்கல் போலீஸ் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.