கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை கூறும்: கமல்ஹாசன் கருத்து
கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை கூறும்: கமல்ஹாசன் கருத்து
UPDATED : அக் 06, 2025 06:53 PM
ADDED : அக் 06, 2025 06:05 PM

கரூர்; கரூர் துயர சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை கூறும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், நடிகர் விஜய்யின் பிரசாரக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் ஆய்வு செய்தார். பின்னர் பலியான ஒன்றரை வயது குழந்தையின் வீட்டுக்குச் சென்ற அவர், பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். கமல் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுங்கு வழங்கினார்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது;
இப்போது நான் வந்திருப்பது துக்கம் விசாரிக்க.. இப்போது குறைகள் கூறுவதற்கோக, நிறைகள் கூறுவதற்கோ நேரம் இல்லை. ஏன் என்றால் இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, அதிகம் பேசக்கூடாது. எல்லாரும் நிறைய பேசிவிட்டனர்.
இங்கே நாங்கள் வந்தது... இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தான். உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள். இவர்களை நிம்மதியாக இருக்க விடுங்க. இவர்கள் பட்டுட்டாங்க பாடு. கேள்விகள் கேட்காமல் இவர்களுக்கு (பாதிக்கப்பட்டவர்களுக்கு) என்ன வழி பண்ண வேண்டும், இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.
இதுவந்த யாரையும் பாராட்டும் நேரம் அல்ல... அந்த பாலத்தில் (அமராவதி ஆற்றுப்பாலத்தை குறிப்பிடுகிறார்) அனுமதி கொடுக்காததற்கு நன்றிதான் சொல்லணும். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்று கேட்பதைவிட வந்தார்களே என்பது தான் எனக்கு ஆறுதல்.
இவர்கள் நேரத்துக்கு வரவில்லை (சம்பவ நிகழ்ந்த தருணத்தை கூறுகிறார்) என்றால் இன்னும் நான்கைந்து பேர் உயிரிழப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நன்றி தான் சொல்லணும். பாராட்டு விழா நடத்த நேரம் இல்லை. செய்யவில்லை என்று சொல்வதற்கு நேரம் இல்லை, இது நடந்துவிட்டது. கோர்ட் விசாரித்துக் கொண்டு இருக்கிறது.
ஒரு தரமான பண்புள்ள அரசியல்வாதி அதை எப்படி நடத்தணுமோ, தலைமை எப்படி செயல்படுத்தணுமோ அதற்கான எல்லா குணாதிசயத்தையும் முதல்வர் காட்டி உள்ளார். அது பெருமையாகவும் உள்ளது, அதற்கு நன்றியும் சொல்ல வேண்டும்.
பாதுகாப்பு குறைபாடு என்று யார் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் (எதிர்க்கட்சிகள்) என்பதை பார்க்க வேண்டும். என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
அப்போது நிருபர் குறுக்கிட்டு, விஜய்க்கு என்ன அறிவுரை சொல்ல இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், அது கோர்ட்டில் சொல்வார்கள் என்று கூறிச் சென்றார்.