கரூர் துயர சம்பவம்: பலி 41 ஆக உயர்வு: 11 பேருக்கு தீவிர சிகிச்சை
கரூர் துயர சம்பவம்: பலி 41 ஆக உயர்வு: 11 பேருக்கு தீவிர சிகிச்சை
UPDATED : செப் 30, 2025 02:48 AM
ADDED : செப் 29, 2025 07:01 AM

கரூர்: கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 41 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூர், வேலுச்சாமிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில், 39 பேர் உயிரிழந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கரூர், சணப்பிரட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த நவீன், 34, என்பவர், நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
உயிரிழந்தவர்களின் உடல்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில், 13 ஆண்கள், 18 பெண்கள், 9 குழந்தைகள் என, 40 பேர் உயிரிழந்தனர். அதில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 32 பேர், ஈரோடு மாவட்டம் - 2, திருப்பூர் - 2, திண்டுக்கல் - 2, சேலம் - 2 பேர் அடக்கம்.
இந்நிலையில் இன்று (செப் 29) அதிகாலை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.