ADDED : டிச 10, 2025 09:05 PM

வாரணாசி: '' மொழி அரசியலை ஒழிக்க வேண்டும்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்துக்கும், உபி.,யின் காசி நகருக்கும் உள்ள ஆழமான நாகரிக பிணைப்புகளை கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி கடந்த டிச., 2 முதல் நடந்து வருகிறது. வரும் 15 ம் தேதி இந்நிகழ்ச்சி முடிவடைகிறது. ' தமிழ் கற்கலாம்' என்ற மையக்கருத்து அடிப்படையில் நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் இன்று அண்ணாமலை பேசியதாவது: மொழி அரசியலை ஒழிக்க வேண்டும். உ.பி.,யைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தமிழகம் வந்து சிறு சிறு தமிழ் வார்த்தைகளை கற்க உள்ளனர். உபி மக்கள் நம்மை சகோதரனாக பார்க்கின்றனர். இது குறித்த புரிதல் இங்கு சிலருக்கு இருக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காசி தமிழ்சங்கமம் 4.0 ல் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளிடையே இருப்பது பாக்கியம். நமது வளமான தமிழ் கலாசாரம், நமது கல்வி முறையில் அதன் இடத்தை பெறுவதை உறுதி செய்வதே பிரதமர் மோடியின் தொலைநோக்குப்பார்வை.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் உந்துதலால் தமிழ் கலாசாரம் தமிழக எல்லைக்கு அப்பாலும் கொண்டாடப்படுகிறது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் காசியின் காலத்தால் அழியாத ஆன்மிகத்தை தமிழகத்தின் வளமான பாரம்பரியத்துடன் இணைக்கிறது. தமிழ் கற்கலாம் மூலம், உபி பள்ளிகள் இப்போது தமிழைக் கற்பிக்கும். அதே நேரத்தில் உபி மாணவர்கள் நமது கலாச்சார பொக்கிஷங்களைக் கண்டறிய தமிழகம் செல்வார்கள். சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலை ஆகியன இந்த கலாச்சார ஒத்துழைப்பில் ஒன்றாக நிற்கிறார்கள்.
https://x.com/annamalai_k/status/1998746045296292316மொழி ஒன்றுபட வேண்டும், ஒருபோதும் பிரிக்கக்கூடாது. வாரணாசியைச் சேர்ந்த ஒரு மாணவர் தமிழ் கற்கும்போதும், மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவர் காசியின் ஞானத்தைக் கண்டறியும்போதும், நாம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்துகிறோம். இப்படித்தான் நாளைய இந்தியாவைக் கட்டமைக்கும்போது நம் முன்னோர்களை மதிக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளர்.

