துணை ஜனாதிபதி ஆக பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து
துணை ஜனாதிபதி ஆக பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து
UPDATED : செப் 09, 2025 10:27 PM
ADDED : செப் 09, 2025 08:56 PM

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் விவரம்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுகள். பொது வாழ்க்கையில் உள்ள நீண்ட அனுபவம் , நாட்டின் வளர்ச்சிக்கு பயனளிக்கும். வெற்றிகரமான பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள் அதிகாரம் பெறுவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, பார்லிமென்ட் விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என நம்புகிறேன்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை டில்லியில் அவர் தங்கியுள்ள இடத்துக்கே வந்து சந்தித்து பிரதமர் மோடிவாழ்த்து தெரிவித்தார் .
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும் நமது பார்லிமென்ட் ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிக் கொணர்ந்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் எங்களுக்கு உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.ராஜ்யசபாவின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
முதல்வர் ஸ்டாலின்
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளை அவர் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
இந்தியாவின் ஜனநாயகத்தின் உணர்வை நிலைநிறுத்தி நாம் பின்பற்றும் கொள்கைகளை பிரதிபலிக்கும் உறுதியான போராட்டத்துக்காக சுதர்சன் ரெட்டியையும் நான் பாராட்டுகிறேன்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்
துணை ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். பா.ஜ., கட்சியின் மூத்த தலைவராகவும், எம்பி ஆகவும் பல்வேறு மாநிலங்களின் கவர்னராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிக சிறந்த அங்கீகாரம் ஆகும். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு பிரதமர் மோடிக்கும், பாஜ தலைவர் நட்டாவுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துணை ஜனாதிபதி பொறுப்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
https://x.com/EPSTamilNadu/status/1965424694108315949
பாமக அன்புமணி
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய உயரங்களைத் தொட வேண்டும்.
இந்தியாவின் 15-ஆம் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றிருப்பது மக்கள் பிரதிநிதிகள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், தமது சிறப்பான பணியின் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன். அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் அவர் புதிய உயரங்களைத் தொடுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.