முதன்முதலாக ‛தினமலர்' நாளிதழை அச்சடித்த அச்சகரின் வாரிசு கடிதம்
முதன்முதலாக ‛தினமலர்' நாளிதழை அச்சடித்த அச்சகரின் வாரிசு கடிதம்
UPDATED : செப் 06, 2025 07:16 AM
ADDED : செப் 06, 2025 05:13 AM

75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
தினமலர் நாளிதழுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அன்புள்ள டாக்டர் பத்மஸ்ரீ லட்சுமிபதி ராமசுப்பையர், ஆசிரியர்கள் மற்றும் மொத்த தினமலர் குடும்பத்துக்கும் என் வணக்கம்.
அச்சமறியா இதழியல், அளவறியா சமூக சேவை என்ற இரண்டு உன்னத லட்சியங்களோடு 75 ஆண்டுகள் என்கிற சிறப்பான மைல்கல்லை எட்டியுள்ள தினமலர் இதழுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். திருவனந்தபுரத்தில் 1951ம் ஆண்டில் டி.வி.ராமசுப்பையர் இந்த மகத்தான தமிழ் நாளிதழை தொடங்கிய போது, என் தாத்தா திரு.சங்கர நாராயண ஐயருக்கு சொந்தமான ராயல் பிரின்டிங் ஒர்க்ஸ் அச்சகத்தில் தான்
அப்பத்திரிகை அச்சிடப்பட்டது.
தமிழ் எழுத்துகளின் அச்சுகளை ஒவ்வொன்றாக தேடி எடுத்து கோர்த்து வார்த்தைகளை உருவாக்க வேண்டிய நடைமுறை இருந்த அன்றைய காலகட்டத்தில், கேரள தேசத்தில் 3,000 பிரதிகள் அச்சிடப்பட்ட தினமலர், இத்தனை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் அதற்கு அப்பாலும் விரிந்து பரந்து, தினமும் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுகிறது என்றால், அன்றைக்கு எவ்வளவு வலுவான அஸ்திவாரத்தை ராமசுப்பையர் கட்டமைத்தார் என்பதை இன்றைய வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.
என் தந்தை திரு எஸ்.என்.ராமசுப்ரமணிக்கு இப்போது 93 வயது. அவர் திருவனந்தபுரத்தில் உருவான முதல் பி.காம்., பட்டதாரிகளில் ஒருவர். சிறுவனாக இருந்தபோது, தன் தந்தையாரின் அச்சகத்தில் தினமலர் நாளிதழுக்காக மை படிந்த கரங்களால் அச்சுக் கட்டைகளை அடுக்கி வைத்து உதவிய காட்சிகளை நெகிழ்ச்சியோடு அவர் நினைவு கூர்கிறார். மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தற்போது சென்னையில் வசித்து வரும் என் தந்தையார், தினமலரின் நீண்ட நெடிய சாதனை பயணத்தில் தன்னுடைய சிறு பங்கும் இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறார். அவருடைய வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்க சொன்னார்.
திரு.சங்கர நாராயண ஐயரின் வழித்தோன்றல்கள் என்ற முறையில், தேசியம், ஆன்மிகம், மக்கள் சேவை என்ற மூன்று துாண்களில் நின்று உண்மையை உரைக்கும் தினமலரின் சாதனை கண்டு, எங்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் நிரம்புகிறது. மக்களின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு, அதை உலகறிய வெளிப்படுத்துவது பத்திரிகைகளின் பிரதான கடமைகளில் ஒன்று என்பர். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தினமலரை பார்க்கும்போது, அந்த தாரக மந்திரத்தை விட்டு நீங்கள் சற்றும் விலகாமல் பயணிப்பது தெளிவாகிறது.
காந்திய சிந்தனைகளில் பற்று கொண்ட உங்கள் நிறுவனர் அன்றே மிகச்சரியாக சொன்னார்: 'வியர்வை சிந்தியும் வலிகளை அனுபவித்தும் செல்வம் ஈட்டுவதன் நோக்கமே, தேவையுள்ளவர்களுக்கும் தகுதியானவர்களுக்கும் அதன் மூலமாக சேவை செய்வதற்காகத்தான்!' தினமலரின் செய்திகளிலும், இணைப்பிதழ்களிலும், சமூக முன்னெடுப்புகளிலும் அந்த நோக்கம் சிறப்பாகவே பிரதிபலிக்கிறது.
தினமலர் இன்னும் பலப்பல தசாப்தங்கள் சிறப்பான முன்னேற்றமும், தாக்கமும், அசைக்க முடியாத சமூகப் பிணைப்பும் கொண்டு மென்மேலும் வளர நாங்கள் மனமார வாழ்த்துகிறோம். தினமலரின் அச்சகங்களில் இருந்து வெளியே வரும் உண்மை செய்திகள், அவற்றின் நுட்பமான அலசல், தெளிவு ஆகியவை அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நம்பிக்கை தரும் வழிகாட்டியாக திகழ இறைவனை வேண்டுகிறோம்.
ஜெயகுமார் கே.ஆர்த/பெ எஸ்.என்.ராம சுப்ரமணிதுரைப்பாக்கம் சென்னை
எஸ்.என். ராமசுப்ரமணித/பெ சங்கர நாராயண ஐயர்