உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை நிறுத்தம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை நிறுத்தம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ADDED : டிச 26, 2025 01:31 AM

உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2017, ஜுன் 4ம் தேதி உத்தர பிரதேசத்தின் உன்னாவில், வேலை கேட்டுச் சென்ற 16 வயது சிறுமியை, அப்போதைய பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான குல்தீப் சிங் செங்கார், கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
வன்கொடுமை
எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததை அடுத்து, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன், அந்த சிறுமி தீக்குளிக்கப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கிற்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, தன் உறவினர் மற்றும் வழக்கறிஞருடன் அந்த சிறுமி காரில் சென்றபோது விபத் தில் சிக்கினார்.
சிறுமியின் உறவினர் உயிரிழந்தார். சிறுமி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணை, உ.பி.,யில் இருந்து டில்லி தீஸ் ஹாஜாரி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதி மன்றம் உத்தர விட்ட து. வி சாரணையும் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏ., குல்தீப் சிங், சிறுமியை க டத்தி பாலியல் வன்கொடுமை செய்தது உண்மைதான் என, கடந்த 2019ல் டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக்கூறி ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமினும் வழங்கி உத்தரவிட்டது.
இது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர்கள் அஞ்சலே பட்டேல் மற்றும் பூஜா ஷில்ப்கர் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
அச்சுறுத்தல்
அதில், 'குல்தீப் கடுமையான குற்றச் செயலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட போதிலும் அதை கண்டு கொள்ளாமல் டில்லி உயர் நீதிமன்றம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளது. 'குடும்பத்தினர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், தன் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமி கருதுகிறார்.
'எனவே உடனடியாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

