நேபாளத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள்; வழக்கு விசாரணையின் போது மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்
நேபாளத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள்; வழக்கு விசாரணையின் போது மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்
ADDED : நவ 03, 2025 05:52 PM

புதுடில்லி: ''நேபாளத்தில் என்ன நடந்தது என்பது தெரியுமல்லவா,'' என்று இளம் சிறார்கள் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்க்க தடை கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த வேண்டும். இளம் சிறார்கள் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்க்க, தடை விதிக்க வேண்டும் எனச் சொல்லி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயின் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 3) தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வருண் தாக்கூர் வாதிடுகையில், ' கோவிட் காலகட்டத்தில் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாகச் செயல்பட்டது. அப்போது முதல் குழந்தைகள் மிக இளம் வயதிலேயே டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
செல்போன் செயலிகளில் ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த எந்தவிதமான வழிமுறையும் இல்லை. இந்தச் சிக்கலைச் சமாளிக்க எந்தவொரு சட்டமும் இல்லை. குறிப்பாக 13 முதல் 18 வயதுக்குட்பட்டோரை ஆபாச வீடியோக்கள் கடுமையாகப் பாதிக்கின்றன' என தெரிவித்தார்.
நேபாளத்தில் நடந்த போராட்டத்தை மேற்கோள் காட்டி, இது போன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நேபாளத்தில் சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய ஒரு முயற்சி நடந்தது. நேபாளத்தில் என்ன நடந்தது என்பது தெரியுமல்லவா?
அதன் விளைவு என்னவென்று நீங்கள் பார்த்தீர்கள். இது தொடர்பாக பார்லிமென்ட் மற்றும் அரசு தான் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே நீங்கள் அவர்களிடம் தான் கோரிக்கை வைப்பது சரியாக இருக்கும். இதை எங்களால் ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நேபாளத்தில் நடந்தது என்ன?
நேபாளத்தில் திடீரென வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் 20 பேர் உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அந்த இளைஞர்கள் போராட்டத்தால் தான் நேபாள அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

