ADDED : அக் 19, 2025 04:03 PM

சென்னை: அரபிக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நிருபர்களைச் சந்தித்த வானிலை மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா கூறியதாவது: தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக்கடலில் நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் லட்சத்தீவு பகுதிகளில் கேரள கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 19 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 21ல் காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும். இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு உள்ளது
இதன் காரணமாக
தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும்.
19 முதல் 22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் கனமழையும்
23 முதல் அக்., 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்காலில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 21 காலைக்குள் கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 19 முதல் 23ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள்
மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள்
தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள்
கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள்
லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மணிக்கு 35 -45 கிமீ., வேகத்திலும் இடையே இடையே 55 கி.மீ., வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்த வரை ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். 27 முதல் 28 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியசும் பதிவாகக்கூடும். இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்