எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி விலையை கட்டுப்படுத்த முடியாது: கனிமவளத்துறை
எம் - சாண்ட், கருங்கல் ஜல்லி விலையை கட்டுப்படுத்த முடியாது: கனிமவளத்துறை
ADDED : செப் 10, 2025 06:59 AM

சென்னை: 'கருங்கல் ஜல்லி, எம் -- சாண்ட் போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த முடியாது' என, கனிம வளத்துறை தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு, ஆற்று மணல் கிடைக்காத நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, எம் - சாண்ட் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கருங்கற்களை ஆலைகளில் உடைத்து, எம் - சாண்ட் தயாரிக்கப்படுகிறது. அதேநேரத்தில், கருங்கல் ஜல்லி மற்றும் எம் - சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தி வருகின்றனர். இதனால், கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், எம் - சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த, அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக மணல், எம் - சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளனம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க, மாவட்ட கலெக்டர்கள், கனிம வளத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில், கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கனிம வளத்துறை துணை இயக்குநர் ஆகியோர், பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: எம் - சாண்ட் தயாரிக்க கருங்கற்கள் தான் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இதில், அடிப்படை தயாரிப்பு செலவு, ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடுகிறது. கருங்கற்களை துகள்களாக உடைப்பது, சுத்தப்படுத்துவது போன்ற நிலைகளில், அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவும் அதிகமாகிறது.
மேலும், கையாளுதல், இருப்பு வைத்தல், போக்குவரத்து செலவுகள், ஜி.எஸ்.டி., மற்றும் லாபம் போன்றவையே, எம் - சாண்ட் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில், சட்ட விரோதமாக கருங்கற்களை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பணிகளை தடுக்க, சட்ட விதிகள், 2011ல் ஏற்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், எம் - சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, அரசுக்கு வழிவகை இல்லை. சட்டவிரோதமாக எம் - சாண்ட் தயாரிப்பது, விற்பதை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால், எம் - சாண்ட் விலையை கட்டுப்படுத்த வழி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக மணல், எம்-சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: எம் - சாண்ட் விலையை கட்டுப்படுத்த முடியாது என, கனிம வளத்துறை கூறுவது, மேலோட்டமான பார்வையாக அமைந்துள்ளது. எம் - சாண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருளான கருங்கற்கள் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசிடம் தான் உள்ளது. எம் - சாண்ட் தயாரிப்பதற்கான விதிமுறைகளை முழுமையாக அதிகாரிகள் படித்தால், விலையை குறைக்க வழி தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.