மடகாஸ்கரில் Gen-Z தலைமுறையினர் போராட்டம் தீவிரம்; நாட்டை விட்டே தப்பி ஓடிய அதிபர்
மடகாஸ்கரில் Gen-Z தலைமுறையினர் போராட்டம் தீவிரம்; நாட்டை விட்டே தப்பி ஓடிய அதிபர்
ADDED : அக் 13, 2025 08:17 PM

அண்டானாநார்வோ: ஜென் இசட் தலைமுறையினர் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், மடகாஸ்கர் அதிபர் நாட்டை விட்டு தப்பியோடி உள்ளதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
தென்கிழக்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மடகாஸ்கர். அதன் அதிபரான ஆண்ட்ரி ரஜோலினா அண்மையில் தமது அமைச்சரவையை ஒட்டு மொத்தமாக பதவி நீக்கம் செய்தார். அவரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அந்நாட்டில் உள்ள Gen Z தலைமுறையினர் (1997ம் ஆண்டுக்கும் 2012ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்கள்) போராட்டத்தில் குதித்தனர்.
மேலும், மடகாஸ்கரில் தண்ணீர் பஞ்சம், மின்சாரம் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இரு முன்னணி அரசியல் தலைவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்து Gen Z தலைமுறையினர் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஒருகட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, மடகாஸ்கரில் அசாதாரண சூழலும், எந்நேரமும் ஆட்சி அதிகாரம் ஸ்தம்பிக்கும் நிலையும் உருவானது. இந் நிலையில் இளைய தலைமுறையினர் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வர, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்ற போவதாகவும் அறிவித்து இருந்தார்.
ராணுவ புரட்சி ஏற்படும் சூழல் காணப்படுவதாக தகவல்கள் எழுந்த நிலையில், திடீரென நாட்டை விட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தப்பியோடிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சிடேனி ராண்ட்ரியானா சோலோனியாகோ அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அதிபர் மாளிகை அலுவலக ஊழியர்களை அழைத்தோம். அவர்கள் அதிபர் நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தினர் என்றார். பிரெஞ்ச் ராணுவ விமானத்தின் மூலம் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.