தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மதுரை கலெக்டர் பகிரங்க மன்னிப்பு
தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மதுரை கலெக்டர் பகிரங்க மன்னிப்பு
ADDED : நவ 26, 2026 07:12 AM

- நமது நிருபர் -
திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை எனவும் மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை கலெக்டர் தாக்கல் செய்த 16 பக்க நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஏற்பாடுகள் தீவிரம்:
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நவ., 20, 21, 22 ஆகிய தேதிகளில் போலீசார், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தீபம் ஏற்றுவதற்கான வழித்தடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டன.
தடை உத்தரவு:
சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க 5,797 போலீசார் மற்றும் 20 நிர்வாக நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். நவ.,23 இரவு முதல் நவ.,25 காலை வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தீபம் ஏற்ற வரவில்லை:
நவ.,24 மாலை 6:00 முதல் 6:30 மணிக்குள் கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 10 பேர் கொண்ட குழு தீபம் ஏற்ற வரவில்லை. அக்குழுவினரின் பெயர்ப் பட்டியலையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.
அறங்காவலர் குழுத் தீர்மானம்:
கோவில் நிர்வாகம் அங்கீகரிக்காத நிலையில், மாற்று நபர்களை நியமிக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. ஆகம விதிப்படி வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானித்தது. அதன் காரணமாகவே, தீபத்துாணில் தீபம் ஏற்ற முடியவில்லை.
நிபந்தனையற்ற மன்னிப்பு:
நீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை. இருப்பினும், தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
