தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மதுரை பிஆர்பி கிரானைட் முறைகேடு: 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு

மதுரை பிஆர்பி கிரானைட் முறைகேடு: 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு

மதுரை பிஆர்பி கிரானைட் முறைகேடு: 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு

3


UPDATED : ஜூன் 26, 2026 06:01 AM

ADDED : ஜூன் 26, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : ஜூன் 26, 2026 06:01 AM ADDED : ஜூன் 26, 2026 03:23 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பி.ஆர்.பி., கிரானைஸ்ட் பழனிசாமி, அவரது குடும்பத்தினர் மீதான சட்டவிரோத குவாரி வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து, புதிய அரசு இந்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டது.

மதுரை, பி.ஆர்.பி., எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் பி.ஆர்.பி., கிரானைட்ஸ் நிர்வாக பங்குதாரர் பழனிசாமி. இந்நிறுவனத்திற்கு, மதுரை மாவட்டம், மேலுாரில் குறிப்பிட்ட சர்வே எண்களில், கிரானைட் கற்களை வெட்டி எடுக்க தமிழக அரசு குவாரி உரிமம் வழங்கியது.

பழனிசாமி, அவரது குடும்பத்தினர் சில அரசு அதிகாரிகளுடன் கூட்டுச்சதி செய்து, குத்தகைக்கு விடாத பகுதிகளிலும் சட்டவிரோத குவாரி பணிகளை மேற்கொண்டனர்.

இதன் வாயிலாக, 7,237 கோடி ரூபாயை சட்டவிரோதமாக ஈட்டியது, நீர்வரத்து கால்வாய்களை அடைத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில், பழனிசாமி, அவரது குடும்பத்தினர் மீது மேலுார், கீழவளவு, ஒத்தக்கடை போலீசில், 2012, 2013ல் வழக்குகள் பதியப்பட்டன. இவை கனிமவள குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய பணத்தை கொண்டு, அசையா சொத்துக்களை வாங்கியதாக சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மத்திய அமலாக்கத்துறை தரப்பில், மதுரை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தங்கள் மீது கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள 34 வழக்குகளை ரத்து செய்யக்கோரி, பழனிசாமி, அவரது குடும்பத்தினர் தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், 'வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பழனிசாமியின் மனைவி, மகள் உள்ளிட்ட சிலர் தேவையின்றி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றார். அரசு வழக்கறிஞர், இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து வாதிட்டார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:



சட்டவிரோத குவாரி பணிகளை அதிகாரிகளின் உடந்தையுடன் மனுதாரர்கள் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர். சில அரசு அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கைகோர்த்து, பெரிய அளவிலான சட்டவிரோத குவாரி பணிகள் தொடர்வதற்கு வழிவகுத்துள்ளனர்.

பெரும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 2012ல் துவங்கிய நடவடிக்கைகளை விரைந்து, இரண்டு மாதங்களில் முடித்து, இறுதி உத்தரவுகளை பிறப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, 2015 மார்ச் 16ல் உத்தரவிட்டது.

விரைவாக முடிப்பதற்கு பதிலாக, அடுத்தடுத்து பல குழுக்கள் அமைக்கப்பட்டதே தவிர, மதுரை கலெக்டர்களாக பதவி வகித்தவர்கள் பயனுள்ள நடவடிக்கையை எடுத்ததாக தெரியவில்லை.

இவ்வழக்கு, 14 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது. அரசு தரப்பு சாட்சிகள் பலரும், 62 வயதுடையவர்கள்; அவர்கள் 14 ஆண்டுகளாக இவ்வழக்கு நடவடிக்கைகள் முடிவடைவதற்காக காத்திருக்கின்றனர். விசாரணையை மேலும் தாமதம் இன்றி விரைந்து முடிப்பது அவசியம்.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. புதிய அரசு, திறமையான அரசு வழக்கறிஞர்களை கொண்ட ஒரு சிறப்புக்குழுவை அமைக்க தலைமை செயலருக்கு உத்தரவிடுகிறோம். இக்குழு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மனுதாரர்கள் சட்டப்படியான தங்களின் வாதங்களை, கீழமை நீதிமன்றத்தில் முன் வைக்கலாம். குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க, குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரும் மனுக்களில் எந்தவித முகாந்திரமும் இல்லை. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us