வெள்ளை மாளிகையில் டிரம்ப்; பாதுகாப்பு தடுப்பு மீது அசுர வேகத்தில் மோதிய கார்
வெள்ளை மாளிகையில் டிரம்ப்; பாதுகாப்பு தடுப்பு மீது அசுர வேகத்தில் மோதிய கார்
ADDED : அக் 22, 2025 11:12 AM

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையின் உள்ளே அதிபர் டிரம்ப் இருக்கும் போது, பாதுகாப்பு வாயில் மீது கார் மோதிய சம்பவம் திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை அதி உயர் பாதுகாப்பு கொண்ட வளாகம். நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் காணப்படும் இந்த மாளிகையில் எப்போதும் போல் டிரம்ப் இருந்துள்ளார்.
அப்போது அதி வேகத்தில் கார் ஒன்று, வெள்ளை மாளிகை நோக்கி வந்தது. அசுர வேகத்தில் சீறி பாய்ந்த அந்த கார், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளின் மீது மோதியது. இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர்.
சம்பவ பகுதியில் பாதுகாப்பு வளையத்தை அதிகரித்த அவர்கள், கார் ஓட்டி வந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த அடையாளம் தெரியாத நபர் உடனடியாக போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாதுகாப்பு தடுப்புகள் மீது கார் மோதிய நேரத்தில், வெள்ளை மாளிகையினுள் அதிபர் டிரம்ப் இருந்துள்ளார். அவர் பாதுகாப்புடன் தான் இருந்தார், வெள்ளை மாளிகை கட்டடத்திற்கு எவ்வித சேதமும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார் மோதிய சம்பவத்தில் பிடிபட்ட நபர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்தை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். மேலும் வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர்.