'மார்க் -1ஏ' இலகு ரக போர் விமானங்கள் விரைவில் வினியோகம் துவக்கம்
'மார்க் -1ஏ' இலகு ரக போர் விமானங்கள் விரைவில் வினியோகம் துவக்கம்
ADDED : செப் 19, 2026 03:49 AM

பெங்களூரு: 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கும், 'மார்க் -1ஏ' இலகு ரக போர் விமானங்களை, இந்தாண்டு இறுதிக்குள் நம் விமானப்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நம் விமானப்படையில் இலகு ரக போர் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், 'மார்க்- 1ஏ' இலகு ரக போர் விமானங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. விமானப்படை சார்பில் 180 விமானங்களுக்கு, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' உடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 1.10 லட்சம் கோடி ரூபாய். இதில் 83 விமானங்களுக்கான முதல் ஒப்பந்தம் 2021 பிப்ரவரியிலும், 97 விமானங்களுக்கான இரண்டாவது ஒப்பந்தம் 2025 செப்டம்பரிலும் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 விமானங்களை விமானப்படைக்கு வழங்க, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் முதல் விமானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் ஜி.இ., நிறுவனத்திடம் இருந்து இன்ஜின்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் முக்கிய சான்றிதழ்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளன.
'இன்ஜின் வினியோகம் தடையின்றி கிடைத்தால், முதல் ஒப்பந்தப்படி 83 விமானங்களை மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வழங்க முடியும்' என, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்' தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மேம்படுத்தப்பட்ட, 'மார்க் -2' இலகு ரக போர் விமானத்துக்கான பணிகளும் நடந்து வருகின்றன. அதன் கட்டமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், 2027 மார்ச்சில் முதல் தரைச் சோதனையும், அதே ஆண்டில் முதல் விமானச் சோதனையும் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.
