பீஹாரில் சமஸ்டிப்பூர் - சஹர்சா ரயிலில் பயங்கர தீவிபத்து; பயணிகள் பீதி
பீஹாரில் சமஸ்டிப்பூர் - சஹர்சா ரயிலில் பயங்கர தீவிபத்து; பயணிகள் பீதி
ADDED : ஆக 03, 2026 08:35 AM

சஹர்சா: பீஹாரில் சமஸ்டிப்பூர் - சஹர்சா பயணிகள் ரயிலில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சஹர்ஷா மாவட்டம் சிம்ரி பக்தியார்பூர் ரயில்நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் நின்று கொண்டிருந்த சமஸ்டிப்பூர் - சஹர்சா பயணிகள் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இன்ஜின் மற்றும் அதனையொட்டியுள்ள பெட்டியில் பரவி இந்தத் தீ, மளமளவென கொளுந்து விட்டு எரியத் துவங்கியது. கரும்புகை மற்றும் தீ வெளியேறுவதைக் கண்ட பயணிகள், அலறியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர். இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், ரயிலில் பற்றி எரிந்த தீயை, 3 மணிநேரமாக போராடி அணைத்தனர்.
ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், மின்கசிவால் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
