தினமலர் என்றென்றும் வெற்றிகரமாக தொடரட்டும்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தினமலர் என்றென்றும் வெற்றிகரமாக தொடரட்டும்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ADDED : செப் 06, 2025 06:29 AM

'தினமலர்' நாளிதழ் இன்று, தன் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
முன்னோடித் தமிழ் நாளேடுகளில் ஒன்றான 'தினமலர்' தனது பவள விழாவைக் கொண்டாடுவதை அறிந்து மகிழ்கிறேன்.
திரு.டி.வி.ராமசுப்பையர் அவர்களால் கடந்த 1951ம் ஆண்டு செப்டம்பர் 6ம் நாள் தொடங்கப்பட்ட தினமலர் நாளேடு வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் வேறுபட்ட வகையில் வெளி வந்து தனக்கென ஒரு வாசகப்பரப்பை உருவாக்கிக் கொண்டது.
தினமலர் நாளேட்டைத் தொடங்கிய திரு.டி.வி.ராமசுப்பையர் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த பெருமைக்குரியவர். அத்துடன் கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஒரு நாளேட்டின் அதிபராகவும், ஆசிரியராகவும் வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்தியவர்.
தினமலருக்கென்று ஒரு பார்வை இருப்பினும், தமிழ் அச்சு ஊடகத்தின் முன்னத்தி ஏர்களில் ஒன்று என்ற பெருமை அதற்கு உண்டு.
தினமலரின் வெற்றிக்கு தொடர்ந்து உழைத்து வரும் ஆசிரியர் திரு.கி.ராமசுப்பு, நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதலையும், தினமலர் பயணம் என்றென்றும் வெற்றிகரமாகத் தொடர எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்