அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளி பரவட்டும்; ஆதீனங்கள் வாழ்த்து
அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளி பரவட்டும்; ஆதீனங்கள் வாழ்த்து
UPDATED : அக் 20, 2025 12:33 PM
ADDED : அக் 20, 2025 07:05 AM

கோவை: தீபாவளி பண்டிகை, இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளி பரவி, மகிழ்ச்சி வெள்ளம் ததும்பட்டும் என்று, ஆதினங்கள், மடாதிபதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் அனைவரது வாழ்விலும்,இருள் நீங்கி,மகிழ்ச்சி என்னும் ஒளியை வழங்கும் பண்டிகையாக தீபாவளி இன்று,கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைத்து நலனும் பெற ஆதினங்களும், மடாதிபதிகளும்பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்: தீபாவளி திருநாளில் அழுக்காறு, பேராசை, சினம், இன்னாச்சொல், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம், பகை, பொய்மை, உயிர்க்கொலை, மது அருந்துதல், கல்லாமை, தீவிரவாதம், வன்முறை, கலவரம் ஆகிய தீக்குணங்கள் எல்லாம் நீங்கும்படியாகவும் அன்பு, பண்பு, ஒழுக்கம், நிறைந்த மனப்பான்மை, சகிப்புத்தன்மை, உளமார்ந்த மன்னிப்பு, சான்றாண்மை, பொறுமை, அறிவு, கருத்துடைய கற்புநெறி, நடுவுநிலைமை ஆகிய நற்பண்புகள் வேண்டியும் ஒவ்வொரு விளக்கினையும் ஏற்றி, வழிபட்டு இறையருள் பெறுவோம்.
சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள்; தீபாவளி திருநாளில், ஒவ்வொருவருக்கும் என்னென்ன, எத்தனை நற்பண்புகள் வேண்டுமோ அத்தனை விளக்குகளை, இறைவனிடம் சமர்ப்பித்து, ஒளியை நிறைவாக கொடுத்து வழிபடுங்கள். அனைத்து உள்ளங்களும், இல்லங்களும், ஊரும், நாடும், உலகமும் அன்பினில் திளைக்கும் நாளாகவும், அறியாமை என்னும் இருளை நீக்கி, அறிவுடைமை என்னும் ஒளியைக் கொடுக்கும் நன்னாளாகவும் அமைய வேண்டும். அதற்கு, எல்லாம் வல்ல முருகப்பெருமான் இறையருள் புரிவார்.
ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் அன்னதான மடாலயம் கிருஷ்ணமூர்த்தி அடிகளார்; தீப ஒளிதிருநாளில் இருள் அகன்று, மகிழ்ச்சி ஒளி நிறைந்திருக்கட்டும். உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள். வாழ்த்துக்களைபகிருங்கள். அன்பை பகிர்வதற்கு இது சிறந்த நேரம். நல்ல ஆரோக்கியம், செழிப்புடன், சமுதாயத்தில் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் வளரட்டும்.
உலகம் நலம் பெற வேண்டும். உயர்ந்த எண்ணமும் ஒளியும் இல்லந்தோறும் பரவ வேண்டும். மண் குளிர வேண்டும். மழை பெய்ய வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். நன்மையால் நிறைந்திருக்க வாழ்த்துகிறோம்.
காமாட்சிபுரி ஆதினம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ; மகாசக்தி அன்னை அங்காளபரமேஸ்வரியின் அருளுடன், அனைவரின் உடல் ஆரோக்கியம் சிறக்க வேண்டும். அனைவரும் பகிர்ந்து உண்போம். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவோம். ஈகை பண்புடன் வாழ்வோம். உழைப்பவர்களுக்கு உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். ஊக்கம் கொடுப்போம். எளியவர் இல்லங்களில், சகல செல்வங்களும் கிடைக்கட்டும். ஏழைகளின் உள்ளங்களில் இன்பம் பெருகட்டும்.
அனைவரது துன்பமும் நீங்கி, இன்பம் மலரட்டும். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறுவோம். அனைவரும் மகிழ்வுடன் வாழ, அன்னை அருளட்டும்; எல்லாம் நிறைவாகட்டும்.
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்: தீபாவளி என்பது தீபம் ஆவளி. தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வது. இருள் நீக்கி ஒளி கொடுப்பது. உள்ளே குடி கொண்டிருக்கிற ஆணவம் நீக்கி ஒளி கொடுப்பது என்பது இதன் உள் தத்துவம். காலையில் சதுர்த்தசி உள்ள பொழுதில் நான்காம் ஜாமத்தில் கங்கா ஸ்தானம் செய்து, இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அனைவரும் வாழ்விலும் இருள் நீங்கி, ஒளி பெற்று இன்பம் பெருகி நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன், அனைவருக்கும் நமது நல்லாசிகள்.
இவ்வாறு, அருளாசி வழங்கியுள்ளனர்.