மெஸ்ஸி விழாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜாமின் மனு தள்ளுபடி; 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவு
மெஸ்ஸி விழாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜாமின் மனு தள்ளுபடி; 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவு
ADDED : டிச 14, 2025 03:15 PM

கோல்கட்டா: கோல்கட்டாவில் மெஸ்ஸி நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட வழக்கில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.
பிரபல அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, நேற்று கோல்கட்டா வந்தார். சால்ட் லேக் மைதானத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பலரும் மெஸ்ஸியை சுற்றி இருந்தனர்.
இதனால் ரசிகர்களால் மெஸ்ஸியை காண முடியாத சூழல் நிலவ அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் ரசிகர்கள் வன்முறையில் இறங்கி மைதானத்தையே சூறையாடினர். இதனால் அங்கிருந்து உடனடியாக மெஸ்சி சென்றுவிட. ரசிகர்களின் செயலுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து, மெஸ்ஸியின் இந்திய பயண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கோல்கட்டா போலீசார் கைது செய்தனர். பின்னர் பிதான்நகர் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் முன் தத்தா இன்று (டிச.14) ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு அவரின் வக்கீல், ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதே நேரத்தில் போலீசாரும் 14 நாள் காவல் கோரி, மனு செய்தனர். தத்தா மீது வேண்டும் என்றே குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாகவும், அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
மெஸ்ஸிக்கு அருகில் யாரை அனுமதிப்பது, அனுமதிக்காதது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் பொறுப்பு என்று போலீசார் பதிலுக்கு வாதிட்டனர். இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தத்தாவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

