வெள்ளி விலை: சர்வதேச சந்தையை விட தமிழகத்தில் அதிகம் முதலீடு, தொழிற்சாலை பயன்பாட்டால் தட்டுப்பாடு
வெள்ளி விலை: சர்வதேச சந்தையை விட தமிழகத்தில் அதிகம் முதலீடு, தொழிற்சாலை பயன்பாட்டால் தட்டுப்பாடு
UPDATED : அக் 14, 2025 05:13 AM
ADDED : அக் 14, 2025 01:30 AM

சென்னை: வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து, தற்போது கிராம், 200 ரூபாயை நெருங்கியுள்ளது. இதனால், வெள்ளியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கருதி, பலரும் வெள்ளி வாங்குவதால், தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக நகை கடைகளில் தினமும் சராசரியாக, 20,000 கிலோ வெள்ளி விற்பனையாகிறது. தற்போது, மின்சார வாகனங்கள், அனைத்து வகையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், சூரியசக்தி மின் சாதனம், வான்வெளி மற்றும் விண்வெளி சாதனங்கள் போன்றவற்றிலும் அதிகளவில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.
புதிய உச்சம்
மொத்த வெள்ளி பயன்பாட்டில், 75 சதவீதமாக இருந்த தொழிற்சாலைகளின் பங்கு தற்போது, 85 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
சர்வதேச நிலவரங் களால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மட்டுமின்றி, வெள்ளியிலும் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், தங்கத்தை போல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்தாண்டு ஜனவரி 1ல் கிராம், 98 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி விலை, தற்போது எப்போதும் இல்லாத வகையில் 200 ரூபாயை எட்டியுள்ளது. இருப்பினும், பலரும் வெள்ளியை முதலீட்டு நோக்குடன் வாங்கி வருவதால், வெள்ளிக்கட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறியதாவது:
வெள்ளி விலை அதிகரித்து வருவதால், பலரும் அதில் முதலீடு செய்கின்றனர். இதனால், வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், வெள்ளியை அடிப்படையாக வைத்து, வெள்ளியில் முதலீடு செய்யக்கூடிய வெள்ளி, 'மியூச்சுவல் பண்டு' திட்டங்களும் உள்ளன.
இந்த மியூச்சுவல் பண்ட் யூனிட்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு யூனிட், 160 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. வெள்ளி உயர்வுக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, மின் வாகனத்துக்கு தேவையான பேட்டரி ஸ்டோரேஜ், சூரியசக்தி மின் சாதனங்களுக்கு வெள்ளியை பயன்படுத்துவதால், பசுமை உலோகமாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், டாலரின் மதிப்பை குறைத்து விடுவார் என்ற அச்சம் உலக நாடுகளிடம் உள்ளது.
ஏனெனில் அனைத்து நாடுகளும், டாலர் மதிப்பின் அடிப்படையில் ஏற்றுமதி செய்கின்றன. டாலர் மதிப்பு உயர்ந்தால், ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பயன் அதிகம்.
ஆலோசனை
எனவே, டாலர் மதிப்பு குறைக்கப்படும் என்ற அச்சத்தால், அனைத்து நாடுகளும், தங்களின் கையிருப்பில் உள்ள டாலரில் இருந்து, ஒரு பகுதியில் தங்கத்தை வாங்கி வருகின்றன. அவை தற்போது வெள்ளியையும் வாங்குகின்றன.
தங்களிடம் உள்ள நிதியில், 20 சதவீதம் தங்கம், வெள்ளி வாங்குமாறு, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை நிறுவனங்கள் ஆலோசனை கூறியுள்ளன. இதனால், அவர்களும் அதிகளவில் தங்கத்துடன், வெள்ளியும் வாங்கி வருவதால், அதன் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
கச்சா வெள்ளியை வைத்து ஆபரணங்கள், பொருட்களை உருவாக்கும் தொழிற்கூடங்களில் தற்போது வேலையில்லாத நிலை உள்ளது.
முதலீடு, தொழிற்சாலை பயன்பாடு என, ஒரு சேர வெள்ளிக்கு தேவை அதிகரித்துள்ளதால், சர்வதேச அளவில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், 'பிரீமியம்' விலையில் வெள்ளி வாங்கப்படுவதால், மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் வெள்ளி விலை சராசரியாக, 6 - 7 சதவீதம் கூடுதலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.