மாணவர்களே இல்லாத 5000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள்: தெலுங்கானா, மேற்கு வங்கத்தில் அதிகம்
மாணவர்களே இல்லாத 5000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள்: தெலுங்கானா, மேற்கு வங்கத்தில் அதிகம்
ADDED : டிச 17, 2025 06:39 PM

புதுடில்லி: நாடு முழுவதிலும் 5000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களே இல்லாமல் உள்ளன. இதில் தெலுங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் 70 சதவீதம் உள்ளன என்று மத்திய அரசு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபாவில் இன்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம், அமரிந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோர் அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை, எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
2025 ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, நாடு முழுவதும் 10.13 லட்சம் அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5,149 பள்ளிகளில் மாணவர்களே இல்லை.
2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையே இல்லாத இந்த பள்ளிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை தெலுங்கானா, மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளன.
10-க்கும் குறைவான அல்லது பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளின் பிரிவிலும் அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த மாதிரியான அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 52,309 பள்ளிகளாக இருந்தது. 2024-25 ஆம் ஆண்டில் அது 65,054 ஆக உயர்ந்துள்ளது.
இந்த பள்ளிகள் இப்போது நாட்டின் மொத்த அரசுப் பள்ளிகளில் 6.42 சதவீதமாக உள்ளன.தெலுங்கானா மாநிலத்தில் 2,081 பள்ளிகளும், மேற்கு வங்கத்தில் 1,571 பள்ளிகளும் காலியாக உள்ளன.
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் மட்டும் 315 பள்ளிகளும், மஹபூபாபாத் 167 பள்ளிகளும், வாரங்கலில் 135 பள்ளிகளும் ஒரு மாணவர் கூட இல்லாமல் உள்ளன.மேற்கு வங்க மாநிலத்தில் கோல்கட்டாவில் 211 அரசு பள்ளிகளும், புர்பா மெடினிபூரில் 177 பள்ளிகளும், டக்ஷின் டினஜ்பூரில் 147 பள்ளிகளும் ஒரு மாணவர் கூட இல்லாமல் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

