கோவில் பணத்தை கொள்ளையடிப்பதில் எனக்கு அனுபவம் குறைவு தான்; அமைச்சர் ரமேஷ் காட்டமான பதில்
கோவில் பணத்தை கொள்ளையடிப்பதில் எனக்கு அனுபவம் குறைவு தான்; அமைச்சர் ரமேஷ் காட்டமான பதில்
UPDATED : ஆக 11, 2026 07:49 PM
ADDED : ஆக 11, 2026 07:46 PM

சென்னை: ''பணத்தை கொள்ளையடிப்பதில், முறைகேடு செய்வதில், நிர்வாக சீர்கேடு செய்வதில், எனக்கு அனுபவம் குறைவு. அவற்றை கற்று கொள்ள நான் தயாராக இல்லை,'' என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தி.மு.க, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, பேட்டியளித்தபோது, “அமைச்சர் ரமேஷ் அனுபவம் குறைவானவர். அதிகாரிகளை மிரட்டுவதோடு, எடுத்தேன் கவிழ்த்தேன் என, பேசுகிறார்,'' என்றார். அதற்கு பதிலளித்து அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டி:
சேகர்பாபு கூறியபடி, நான் அரைகுறையாக தான் இருக்கிறேன். அதாவது, அறநிலையத் துறையில் தி.மு.க.,வினர் செய்த ஊழல், முறைகேடு, கோவில் பெயரை வைத்து மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றினர் என்பது குறித்து, அரைகுறையாகவே தெரிந்துள்ளது. முழுமையாக தெரிந்த பின், சேகர்பாபு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்.
எனக்கு அனுபவம் குறைவு தான். கோவில் பணத்தை கொள்ளையடிப்பதில், முறைகேடு செய்வதில், நிர்வாக சீர்கேடு செய்வதில், எனக்கு அனுபவம் குறைவு. அவற்றை கற்று கொள்ள நான் தயாராக இல்லை. ஒரு வேலையை வேகப்படுத்துமாறு அறிவுறுத்துவது மிரட்டல் என்றால், உண்மையான மிரட்டல் எது?
என்னிடம் பேசிய பல உபயதாரர்களும், 'கடந்த தி.மு.க., ஆட்சியில் ஒரு பணியை செய்வதற்குள், ஏன் இதை எடுத்தோம் என நினைக்க தோன்றும் அளவுக்கு பிரச்னைகள் இருக்கும். தற்போது அப்படி இல்லை.
சீக்கிரம் பணியை செய்து முடிக்கிறோம்' என தெரிவித்தனர். சேகர்பாபு வேண்டுமானால், கோவில் உபயதாரர்களை மிரட்டி 'வீடியோ' எடுத்து வைத்திருக்கலாம். எனக்கு அந்த பழக்கம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
