தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்; இபிஎஸ்

எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்; இபிஎஸ்

எனது மகன் அரசியலுக்கு வர மாட்டார்; இபிஎஸ்

39


ADDED : ஜூன் 18, 2026 01:00 PM

Follow on GoogleFavourite on Google

39

ADDED : ஜூன் 18, 2026 01:00 PM


39
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'என்னுடைய மகன் அரசியலுக்கு வர மாட்டார். பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வதந்தியை பரப்ப வேண்டாம்,' என்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; வழக்கம் போல கவர்னர் உரையில் கனிமவளம் மற்றும் கலாலில் பெறப்படும் வருவாயைப் பற்றி, அதை முறைப்படுத்தி, அந்த செய்தியை வெளியிட்டுள்ளார்கள். அதோடு, நிதி ஆதாரத்தை பெருக்கி கொடுத்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், போதைப்பொருள் தடுக்கப்படும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருந்தார். ஆனால், இன்றைக்கு நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 38 நாட்களில் 150 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 126. 130 கொலைகள் நடந்துள்ளன.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வீர வசனம் பேசினார்கள். இந்த 38 நாட்களில் இவ்வளவு வழக்குகள் உள்ளன. சிங்கப்பெண் சிறப்பு படையின் பாதுகாப்பிற்கே இன்னொரு படை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளுக்கு தேர்தல் நேரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள். மாறாக இந்த அரசாங்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தவெக தலைவர் விஜய் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாகவும், 5 ஏக்கருக்கு கூடுதலாக நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், தற்போது விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனர். அதற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு விவசாயிகளை ஏமாற்றியது தான் இந்த அரசாங்கம்.

பொதுவாக குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் இருந்தால் ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நீரைப் பெற்றிருந்தால் தண்ணீர் திறந்திருக்கலாம். ஆனால், இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் இந்த அரசின் கூட்டணியில் தான் இருக்கிறார்கள்.

அண்மையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், 436 திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சொன்னார்கள். இது எல்லாம் அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெறவில்லை. மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். இது எதுவுமே கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. அதேபோல, அடிக்கடி மின்தடைகள் ஏற்படுகின்றன. தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், மின்துறையில் இரண்டரை லட்சம் கோடியும், போக்குவரத்து துறையில் ரூ.72 ஆயிரம் கோடி, குடிநீர் வழங்கல் துறையில் ரூ.7,700 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகவும், பொது விநியோகத் திட்டத்தில் ரூ.27 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதை எல்லாம் தெரிந்து தானே, சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது, இந்த பிரச்னைகள் எல்லாம் சரி செய்த பின்னரே, வாக்குறுதிகளை செய்வோம் என்கின்றனர். இவர்கள் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்பது தான் பொருள். இதற்காகவே, வெள்ளை அறிக்கையை அவர்கள் வெளியிட்டதாக நான் கருதுகிறேன்.

ஏற்கனவே, ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாக தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. அப்படியிருந்தும் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதனை நம்பி மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்.கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகள் ஏதுமே இடம்பெறவில்லை.

என்னுடைய மகன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. என்னுடைய மகன் அரசியலுக்கு வர மாட்டார். பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வதந்தியை பரப்ப வேண்டாம். வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்புகின்றனர். என் தலைமை சரியில்லாவிட்டால் சி.விஜயபாஸ்கர் ஜெயிக்க முடியுமா? தலைமை சரியாக இருந்ததால் தான் அவர் வெற்றி பெற்றார். ஓட்டுப்போட்ட மக்களையும், வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் அவர் மதிக்கவில்லை. அதற்கான பலனை அவர் எதிர்கொள்வார், இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us