நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது உள்துறை அமைச்சகம்!
நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது உள்துறை அமைச்சகம்!
ADDED : செப் 28, 2025 09:00 PM

புதுடில்லி: நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்துள்ளார்.
நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சரண் அடையும் வரையோ, பிடிபடும் வரையோ அல்லது கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறி இருந்தார்.
இந் நிலையில், நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்துள்ளார். அவர்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது;
இது வரை நடந்தது தவறு, நாங்கள் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கிறோம், சரண் அடைய விரும்புகிறோம் என்ற குழப்பத்தை பரப்பும் வகையில் நக்சல்கள் தரப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அவர்களுக்கு சண்டை நிறுத்தம் இருக்காது என்று நான் அறிவிக்கிறேன்.
நீங்கள் சரண் அடைய விரும்பினால், சண்டை நிறுத்தம் தேவையில்லை. உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள். ஒரு தோட்டா கூட உங்களை நோக்கி பாயாது. சரண் அடைய விரும்பினால் சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கிறது.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.