கரூர் சம்பவத்தை நீதிமன்றம் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்; தவெக பொ.செ உட்பட 4 பேர் மீது வழக்கு
கரூர் சம்பவத்தை நீதிமன்றம் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்; தவெக பொ.செ உட்பட 4 பேர் மீது வழக்கு
UPDATED : செப் 29, 2025 07:28 AM
ADDED : செப் 28, 2025 11:14 AM

சென்னை: கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கரூரில் நடந்த துயரம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. எவரையும் உடனடியாக யாரையும் குறை கூற முடியாது. தீவிரமாக விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அமர்வு இந்த பிரச்னையை இன்றே விசாரிக்க வேண்டும்
தமிழக அரசு அமைத்த குழுவை நாங்கள் நம்பவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
4 பேர் மீது வழக்கு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது கொலை முயற்சி, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அறிக்கை கேட்பு
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வரிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்டுள்ளார்.