நிலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் திட்டம்; இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு
நிலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் திட்டம்; இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு
ADDED : ஆக 11, 2026 06:16 PM

நமது நிருபர்
நிலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் திட்டத்தில் இணையும்படி, 'இஸ்ரோ'வுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவில் ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான பூர்வாங்கப்பணிகள் நடந்து வருகின்றன. விண்கலம் தயார் செய்யப்படுகிறது. ஆய்வு நிலையம் கட்டுமானத்தை செய்ய வேண்டிய பொறியாளர்கள், விஞ்ஞானிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.
நாசா அமைப்பின் கனவுத்திட்டமான இந்த ஆய்வு நிலையத்தை உருவாக்கும் பணியில் இணைய இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடந்த இந்தியா - அமெரிக்கா விண்வெளி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் இந்த ஆய்வு நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாவது:
மனிதகுலத்தின் அடுத்த மாபெரும் பாய்ச்சல் தொடங்கிவிட்டது. நாசா நிலவில் ஒரு ஆய்வு நிலையத்தை உருவாக்கும் பூர்வாங்க பணிகளை செய்து வருகி; இது நிலவில் மனிதன் அமைக்கும் முதல் ஆய்வு நிலையம். இந்த நிலையம், நிலவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதோடு, செவ்வாய் கிரகத்திற்கான மனிதர் பங்கேற்கும் பயணங்களுக்கும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை மேற்கோள் காட்டி, 'அமெரிக்கா இந்தியா இடையே விண்வெளி துறையில் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாசா தனது நிலவு ஆராய்ச்சி திட்டத்தில் இணையுமாறு இஸ்ரோவிற்கு அழைப்பு விடுத்துள்ளது' என இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
முக்கிய மைல்கல்!
நாசாவின் திட்டம், நிலவின் தென் துருவப் பகுதியில் மனிதர்கள் தங்கி ஆய்வு செய்ய ஒரு நிரந்தரமான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கும் மூன்று கட்ட மெகா திட்டமாகும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் செலவிட உள்ளனர். 'ரோவர்கள், ட்ரோன்'கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடியதாக இந்த ஆராய்ச்சி நிலையம் இருக்கும்.
