9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 'எமர்ஜென்சி'; அறிமுகம் செய்தது என்.சி.இ.ஆர்.டி.,
9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 'எமர்ஜென்சி'; அறிமுகம் செய்தது என்.சி.இ.ஆர்.டி.,
ADDED : ஜூன் 25, 2026 06:04 PM

நமது நிருபர்
இந்தியாவில் 1975ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பிரதமராக இந்திரா இருந்தார். அரசியல் ரீதியான நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட்ட நிலையில், ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் எமர்ஜென்சி கொண்டு வரப்படுவதாக அவர் அறிவித்தார். 1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை, 21 மாதங்கள் இந்த எமர்ஜென்சி அமலில் இருந்தது.
இந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஜனநாயக நடைமுறைகள் தடை செய்யப்பட்டன. நாட்டின் வரலாற்றில், எமர்ஜென்சி காலம் ஒரு கருப்பு அத்தியாயம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு தொடர்பான பாடத்தை, 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் செய்துள்ளது. இந்திய ஜனநாயகம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று என, நெருக்கடி நிலை வர்ணிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பாடப்புத்தகத்தில் அவசரநிலை குறித்த ஒரு பகுதி சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை என்று என்.சி.இ.ஆர்.டி., அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தப் பகுதி பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
