தற்செயலாக நடந்த தவறு: நீதித்துறை குறித்த பாடப்புத்தகத்திற்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
தற்செயலாக நடந்த தவறு: நீதித்துறை குறித்த பாடப்புத்தகத்திற்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
UPDATED : பிப் 26, 2026 11:03 AM
ADDED : பிப் 26, 2026 10:59 AM

புதுடில்லி: சிபிஎஸ்இ எட்டாம் வகுப்புக்கான சமூக அறவியல் புதிய பாடத்தில் நீதித்துறை குறித்த பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அதற்காக மன்னிப்பு கோரியுள்ள என்சிஇஆர்டி, அந்த பாடத்தை திரும்ப பெற்றுக் கொண்டது.
இது தொடர்பாக என்சிஇஆர்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எட்டாம் வகுப்புக்கான '' Exploring Society: India and Beyond தொகுதி 2'' சமூக அறிவியல் பாடப்புத்தகம் கடந்த 24 ம் தேதி வெளியிடப்பட்டது. புத்தகத்தை பார்த்த பிறகு தான், சில பொருத்தமற்ற உள்ளடக்கம் மற்றும் நீதித்துறையில் தவறு ஆகியன 4வது பாடமான '' நமது நீதித்துறையில் சமூகத்தின் பங்கு''( பக்கங்கள் 125 - 142) என்ற தலைப்பில் இடம்பெற்று இருந்ததை அறிந்து கொண்டோம். மத்திய கல்வி அமைச்சகமும் இதனை கண்டறிந்ததுடன், மறு உத்தரவு வரும்வரை, புத்தக விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நீதித்துறை மீது உயர்ந்த நம்பிக்கை வைத்துள்ளோம். இந்திய அரசியல் சாசனத்தை நிலைநிறுத்துகிறது. அடிப்படை உரிமைகளை பாதுகாக்கிறது என்பதை அறிந்துள்ளோம். புத்தகத்தில் உள்ள பிழை தற்செயலானது. பாடத்தில் பொருத்தமற்றவற்றை சேர்த்ததற்கு என்சிஇஆர்டி வருத்தம் தெரிவித்து கொள்கிறது.
அரசியலமைப்பின்படி அமைக்கப்பட்ட எந்த அமைப்பின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ என எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. தொடர் மறு ஆய்வு முறையின்படி ஆக்கப்பூர்வமான கருத்துகளை கேட்டறிய வெளிப்படையாக உள்ளோம். குறிப்பிட்ட அந்த பாடம் முறையான ஆலோசனைக்கு பிறகு மீண்டும் எழுதப்படும். நீதித்துறை குறித்த கருத்துக்கு மீண்டும் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் என்சிஇஆர்டி கூறியுள்ளது.
சர்ச்சை
சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு க்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தாமாக முன்வந்து இந்த விவகாரரத்தை விசாரணைக்கு எடுத்தார்.

