நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட் வெளியானது; முறைகேடுகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு
நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட் வெளியானது; முறைகேடுகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு
ADDED : ஜூன் 14, 2026 08:42 PM

புதுடில்லி: நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மே 3ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் எதிரொலியாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இம்முறை ஓஎம்ஆர் தாள் நிரப்புதல், ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகிய நடைமுறைகளுக்காக கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இதை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 21ம் தேதி மறு தேர்வுக்குச் செல்வோர் தற்போதைய புதிய ஹால் டிக்கெட்டைத்தான் கொண்டு செல்ல வேண்டும். பழைய ஹால் டிக்கெட் செல்லாது. புதிய ஹால் டிக்கெட்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின், உடனடியாக தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ உதவி எண்களை அழைத்து சரி செய்து கொள்ளலாம்.
கடந்த முறை வினாத்தாள் கசிவு, முறைகேடு புகார்கள் எழுந்ததால் இம்முறை மத்திய மற்றும் மாநில விசாரணை முகமைகள் தேர்வு மையங்களை முழுமையாக கண்காணிக்க உள்ளன.
