நேபாள பெருவெள்ளத்தின் உச்சக்கட்ட சோகம்: பள்ளிகளுக்குச் சென்ற 600 குழந்தைகள் மாயம்
நேபாள பெருவெள்ளத்தின் உச்சக்கட்ட சோகம்: பள்ளிகளுக்குச் சென்ற 600 குழந்தைகள் மாயம்
ADDED : செப் 04, 2026 04:46 PM

காத்மாண்டு: நேபாளம் வெள்ளத்தில் 600 குழந்தைகள் மாயமான விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஆக.26ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்நாட்டை புரட்டி போட்டுள்ளது. இன்றைய (செப்.4) நிலவரப்படி பலி எண்ணிக்கை என்பது 1282 ஆக இருக்கிறது. 4798 பேரை காணவில்லை. மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் இன்னமும் தொடர்கின்றன.
இந் நிலையில், பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நேபாளின் ரசுவா, நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் 600 குழந்தைகள் மாயமாகி உள்ள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. நேபாளத்தில் செயல்படும் கல்வி மேம்பாட்டுக்கான அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொகுத்துள்ள புள்ளிவிவரங்களில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய நேபாளத்தில் உள்ள ரசுவா மாவட்டத்தில் 290 குழந்தைகள், நுவாகோட் மாவட்டத்தில் 300 முதல் 350 குழந்தைகள் வரை காணவில்லை. இதுகுறித்து நுவாகோட் கல்வி மேம்பாட்டு ஓருங்கிணைப்பு பிரிவு தலைவர் சூர்யா பகதூர் கத்ரி கூறியதாவது;
காணாமல் போயிருக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை சரியாபார்க்க பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். தகவல் தொடர்பில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதன் காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் துல்லியமான தகவல்களை தருவதில் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
மாயமான மாணவர்கள் குறித்த புதிய தகவல்கள் பல்வேறு பள்ளிகளில் இருந்து எங்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன. எங்களின் நுவாகோட் மாவட்டத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 300 மாணவர்கள் மாயமாகி இருக்கலாம் என்று மதிப்பிட்டு உள்ளோம்.
இவ்வாறு சூர்யாபகதூர் கத்ரி கூறினார்.
மாணவர்கள் தவிர ஆசிரியர்களும் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமாகி இருக்கின்றனர். ரசுவாவில் 16 ஆசிரியர்களை காணவில்லை. இவர்களில் 15 பேர் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒருவர் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்.
ரசுவா, நுவாகோட், தாடிங் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 22 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 12 முற்றிலும் அழிந்துவிட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
